குலதெய்வ வழிபாடு
ஒரு குடும்பத்தில் நடைபெறும் காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் அவர்களின் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடாவெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றார்கள்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். வருடத்திற்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும். ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் மக்கள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள்.
நாம் கூப்பிடாமல் வந்து உதவி செய்யும் தெய்வமே குல தெய்வம்..குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.உங்கள் இஷ்ட தெய்வங்களும் தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். அதே நேரத்தில் மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு . ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. அது அவரது குலத்திற்கே கேடு விளைவிக்கும்..
சில வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குல தெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்கு போல பழனி, திருப்பதி அல்லது வைதீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள்.
எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குல தெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பது போன்றதே என்ற தவறு தெரிவது இல்லை. அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகி விட அது அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது. அந்த குல தெய்வ சாபம் அந்த குடும்பத்தினருக்கு தொடரும்.
ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை.
குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தாலும் பலனில்லை . எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.குல தெய்வம் என்பது உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும். அல்லது உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பாற்றியவராய் கூட இருக்கலாம்.
எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள்.
மற்ற கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்
ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால் தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக் கடனை செலுத்திட வேண்டும்…அய்யனார், முனீஸ்வரர், வேடப்பர், கருப்பு இந்த எல்லை தெய்வங்கள் நேரடியாகவே கனவில் வந்து பேசக்கூடியதெல்லாம் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.
குலதெய்வத்தில் கூட பேஷன் பார்க்கிறவர்கள், அதைகூட பெருமையாக புகழ்பெற்ற கோயிலாக சொல்லிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்
ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது. அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.
இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள்.இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள். உங்களுக்கு பிடித்த இஷ்டதேவதையை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வருடத்திற்கு ஒரு முறை சென்று வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.
.....Na su karthi. 👈